ஊராட்சி ஒன்றிய ஆபிஸ் கட்டுமான பணி தீவிரம்
சங்ககிரி, ஜன.24: சங்ககிரி-குப்பனூர் பைபாஸ் பகுதியில் ₹5.36 கோடி மதிப்பீட்டில் லிப்ட் வசதியுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம் முன்பு செயல்பட்டு வருகிறது. இங்கு இடவசதி பற்றாக்குறை காரணமாக, குப்பனூர் பைபாஸ் பகுதியில் 1 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, லிப்ட் வசதியுடன் 2 அடுக்குடன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த அக்டோபர் 23ம்தேதி நடைபெற்றது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் முன்னிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக இரும்பு ராடுகளால் பில்லர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதை தொடர்ந்து, ஆணையாளர் அறை, பிடிஓ, சேர்மன் அறை, மன்ற கூட்ட அரங்கம், கம்யூட்டர், வீடியோ கான்பிரன்ஸ் உள்ளிட்ட அறைகள் கொண்ட இரண்டு அடுக்கு கட்டிடம் விரைந்து முடிக்க பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.