இரண்டாம் சீசன் நெருங்குகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா பராமரிப்பு தீவிரம்
ஊட்டி, ஜூலை 10: இரண்டாம் சீசன் நெருங்கிவரும் நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. ஊட்டியில் இரு சீசன்கள் நடைபெறுகிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை முதல் சீசனாகவும், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் மாதம் வரை இரண்டாம் சீசனாகவும் நடைபெறுகிறது. முதல் சீசனில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், அப்போது பல்வேறு கண்காட்சிகள் மற்றும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதனை கண்டு சுற்றுலா பயணிகளும் மகிழ்கின்றனர். இரண்டாம் சீசனில், முதல்சீசன் போன்று விழாக்கள் அதிகளவு நடத்தப்படுவது இல்லை. அதே சமயம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், அரசு தாவரவியல் பூங்காவில் சிறிய மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள நர்சரியில் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளது. அதேபோல், பூங்காவில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சால்வியா மலர் செடிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மற்றும் தொட்டிகளில் மண்நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது.