ஓசூர் சிவபத்ரகாளி கோயிலில் ஓம்கார வேள்வி
ஓசூர், ஜூலை 1: மத்திகிரி ராயல் டவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவ பத்ரகாளியம்மன் கோயிலில் மூலவரான சிவபத்ரகாளி அம்மன் பத்மபீடத்தில் அருள்பாலிக்கிறார். கோயில் முன்பு சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து, கோ பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம் மற்றும் ஓம்கார சிவபத்ரகாளி சிறப்பு வேள்வி நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பல்வேறு திரவியங்களை வேள்வியில் செலுத்தினர். இதைத் தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கலசங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு கோயிலை வலம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.