பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்,ஜூலை 23: பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பென்ஷன் ரூ.6,750 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில்- கருப்பு துணியில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பு பென்ஷன் ரூ.6,750 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக, பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு, நேற்று 22ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கருப்புத் துணியால் முக்காடு அணிந்து ஒப்பாரி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்யும் போராட்டம் நடை பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சிவகலை தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சின்னதுரை வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்கள் புலிகுட்டி, சுந்தர்ராஜன், மாவட்ட இணை செயலாளர்கள் மகாலிங்கம், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பால் சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லபிள்ளை ஆகியோர் வாழ்த்துரை பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்து சாமி நன்றி தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பெண்கள் கருப்பு துணியால் முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.