சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்
தூத்துக்குடி, ஜூலை 23: குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6750 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வு வரும்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத தொகையை வழங்கவேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பாக கருப்பு முக்காடு, ஒப்பாரி என நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வைஜெயந்தி மாலா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி செல்வம், நகரச் செயலாளர் வெனிற்றால் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முக லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி: இதேபோல் கோவில்பட்டியில் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க வட்டாரத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் ராமலட்சுமி ஆர்ப்பாட்டத்தைத் துவக்கிவைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கனகவேல், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் ஓய்வுபெற்றோர் சங்க மாவட்டச் செயலாளர் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கினர். இதில் கயத்தாறு ஒன்றிய குழு உறுப்பினர் மாரிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் தலையில் முக்காடு அணிந்தவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.