உலக மக்கள் தொகை தினத்தையொட்டி செவிலியர்கள் விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு, ஜூலை 13: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஜூலை 11 உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவ கல்லூரி செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. முன்னதாக, சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கு வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலனை பாதுகாத்தல், குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.