5 மாநிலங்களில் 18 திருட்டு வழக்குகளில் தொடர்பு தொழிலதிபரின் வீட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையன் கைது
புதுச்சேரி, ஜூலை 2: புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வீட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 5 மாநிலங்களில் 18 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.30 லட்சம் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் விரிவாக்கம் பகுதியை ேசர்ந்தவர் தரன் (67). இவர் விழுப்புரத்தில் டயர் ரீரேடிங் கம்பெனி வைத்து தொழில் செய்து வந்தார். பின்னர், வயது முதிர்வால் தொழிலை கைவிட்டு விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு சூரிய பாலா என்ற மனைவியும், ஷாலினி என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு சென்னையை சேர்ந்த சிவா என்பவருடன் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். தரன், மனைவியுடன் ரெட்டியார்பாளையத்தில் வசித்து வருகிறார்.
தரன், அடிக்கடி மகளை பார்க்கவும், மருத்துவ பரிசோதனைக்கும் சென்னைக்கு சென்று வருவது வழக்கம்.
அதன்படி, கடந்த பிப்ரவரி 16ம் தேதி சென்னைக்கு சென்றிருந்தபோது, அவரது வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த தங்க வளையல், வைர வளையல், கம்மல், மோதிரம், பிரேஸ்லட் உள்ளிட்ட 30 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து தரன் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபரின் படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் தரனின் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடியது ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுலபாலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (24) என தெரியவந்தது. அவரை விஜயாவாடா ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, கோவா மாநிலங்களில் சுமார் 18 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு இருப்பதும், கொள்ளையடித்த பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்காகவும், கிரிக்கெட் பந்தயத்திற்கும் செலவிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 2வது வாரத்தில் அவர், சென்னையில் இருந்து வாடகைக்கு காரை எடுத்து புதுச்சேரிக்கு வந்துள்ளார். ரெட்டியார்பாளையம் பகுதியில் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டுள்ளார்.
தரன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட கொண்ளையன் கடந்த பிப்ரவரி 18ம் தேதி அதிகாலை தரன் வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு, இரும்பு கம்பியால் பக்கவாட்டு ஜன்னல் கதவுகளை உடைத்து வீட்டிற்குள் புகுந்து, பீரோவில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து உள்ளார். பின்னர் அவர், நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற சுற்றுலா இடங்களுக்கு சென்று கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கைக்காக செலவிட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும். இவ்வழக்கில் 5 மாதம் விசாரணை செய்து, 15 நாட்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் முகாமிட்டு நோட்டமிட்டு கொள்ளையனை பிடித்து, திருட்டு பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணன் பாராட்டினார்.