அனுமதியின்றி கட்டிடம் கட்டிய பாஜ நிர்வாகிக்கு நோட்டீஸ் குடியாத்தம் நகரில்
குடியாத்தம், அக்.5: குடியாத்தம் நகரில் அனுமதியின்றி கட்டிடம் கட்டிய பாஜ நிர்வாகிக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உலகாசி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். பாஜ குடியாத்தம் நகர பொருளாளர். இவருக்கு சொந்தமாக 15வது வார்டில் உள்ள வேலூர் சாலையில் இடம் உள்ளது. அந்த இடத்தில் கட்டிடம் கட்டி வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். மேலும், அங்கு முன்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடமும் உள்ளதாம். அதில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சியின் அனுமதியின்றி புதிய கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த மாதம் 30ம் தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் விஜயன் புகார் தெரிவித்தார். இந்நிலையில், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், பாஜ நிர்வாகி ஹரிகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, `நகராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அந்த இடம் முறையாக சர்வே செய்யப்படும். அதன்பின்னர் முறைகேடு தெரியவந்தால் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் அந்த கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.