கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலை ரூ.1.50 கோடியில் அகலப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவு
கோத்தகிரி, செப்.3: கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலை ரூ.1.50 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது.
இதில் குறிப்பாக கோடநாடு காட்சி முனை உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவார்கள். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கோடைக்காலம் மட்டுமல்லாமல், வார விடுமுறை நாட்கள், வார நாட்களிலும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். கோடைக்காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளும், வார நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்கள், விழாக் காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வருகையால் அடிக்கடி எஸ்.கைக்காட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது.
இது சம்பந்தமாக மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கோத்தகிரி நகர் பகுதியான டானிங்டன் பகுதியில் இருந்து முக்கிய சுற்றுலா தலமாக திகழும் கோடநாடு காட்சி முனைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள எஸ்.கைக்காட்டி பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையினர் மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் சங்கர் லால், உதவி பொறியாளர் ரமேஷ் அடங்கிய நெடுஞ்சாலை துறையினர் எஸ்.கைக்காட்டி பகுதியில் முக்கிய சாலைவழி சந்திப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டனர்.
சுமார் ஐந்து மாதத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தற்போது, அங்கிருந்த பழைய நிழற்குடை அகற்றப்பட்டு, அப்பகுதியில் வாகனங்கள் சென்று வரவும், சாலை விதிகளை பின்பற்றும் வகையிலும், வாகன விபத்துக்களை தடுக்கும் விதித்திலும், கோடை சீசன் போன்ற காலங்களில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய சாலைவழி சந்திப்பு (சதுக்கம்)அமைக்கப்படவுள்ளது.தற்போது 90 சதவீதம் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. இதில், சாலை விரிவாக்கம், வேகத்தடை அமைத்தல், சாலையோர தடுப்புகள், திசை விளக்குகள் அமையப்பெற உள்ளது.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள சாலை வழி சந்திப்பு மூலம் கோத்தகிரி நகர் பகுதியில் இருந்து கோடநாடு காட்சி முனை, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், கரிக்கையூர், கூட்டாடா அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கோடநாடு காட்சி முனைக்கு தடையின்றி போக்குவரத்து நெரிசலை தவிர்த்து வந்து செல்லக்கூடிய வகையில் அமையப்பெற உள்ளது.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடிய முக்கிய சாலை வழி சந்திப்பு மூலம் எதிர் வரும் காலங்களில் விபத்துக்களை தவிர்த்து, சீரான போக்குவரத்தை மேற்கொள்ள உள்ளதால் தற்போது எஸ்.கைக்காட்டி பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.