சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு: ஊட்டியில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ஊட்டி,செப்.14: ஊட்டியில் வரும் 19ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில் மாதந்தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை பெரிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில்கோவை, சென்னை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் துறைகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகின்றனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு முகாம் நடத்தப்பட்டு ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், வரும் 19ம் தேதி ஊட்டியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும், தாங்கம் விரும்பும் நிறுவனங்களுக்கும் வேலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இது குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், ஊட்டியில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். எனவே, நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
வேலை நாடுநர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு உதகமண்டல மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அல்லது தொலைபேசி 0423-2444004, 7200019666 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.