செல்போன் கடையில் திருட்டு
ஊட்டி, செப்.14: ஊட்டி நகரில் உள்ள ஒரு செல்போன் கடையை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் லேப்டாப் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர். ஊட்டி நகரின் மையப்பகுதியில் சேட் நினைவு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் அனிபா என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த கடையை உடைத்து சிலர் உள்ளே சென்று விலை உயர்ந்த 15செல்போன்கள் மற்றும் லேப்டாப் போன்றவைகள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியும், ஊட்டி மத்திய நகர காவல் நிலையம் அருகே உள்ள இந்த கடையில் திருட்டு போன சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.