ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.9 லட்சத்தில் தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணி தீவிரம்
ஊட்டி, டிச.12: தொட்டபேட்டா சிகரம் செல்லும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதது. சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வந்துச் செல்கின்றனர். மேலும் வெளி நாடுகளில் இருந்தும் வருகின்றனர். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான மக்கள் தொட்டபெட்டாவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வதுடன், பைனோகுலோர் மூலம் தொலை தூரத்தில் உள்ள இயற்கை அழகு மற்றும் பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், தொட்டபெட்டா செல்லும் சாலை மகிவும் பழுதடைந்திருந்த நிலையில் கடந்த 4 ஆண்டுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, நாள் தோறும் வாகனங்கள் சென்று வந்த நிலையிலும், எந்நேரமும் மழை பெய்த நிலையிலும் இச்சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே இச்சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.9 லட்சம் நிதி ஒக்கிடு செய்து இச்சாலையில் உள்ள பள்ளங்களை தார்கலவை கொண்டு நிரப்பி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களாக இச்சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்காலிகமாக தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், தொட்டபெட்டா சிகரத்தை காண சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.