வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் ஆய்வு
ஊட்டி, ஆக. 30: ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிடங்கில் கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 3 தொகுதிகளிலும் 890 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களின் போது பயன்படுத்தப்படும் வாக்குபதிவு இயந்திரங்கள் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய கிடங்கில் ைவக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டது.
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பாக உள்ளனவா என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள கிடங்கினை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.