வாக்கு இயந்திரங்களின் பயன்பாடு குறித்த செயல் விளக்க மையம் திறப்பு
பாலக்காடு,ஆக.23: பாலக்காடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குச்சாவடி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்த செயல் விளக்க மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாலக்காடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடியில் பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலக்காடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குச்சாவடி இயந்திரங்கள் குறித்து செயல் விளக்க மையத்தை மாவட்ட கலெக்டர் மாதவிக்குட்டி திறந்து வைத்தார். இந்த மையத்தில் மூன்று பாலட் யூனிட் இயந்திரங்களின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தேர்தல் ஆணையம் துணை கலெக்டர் சஜித், மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சுரேஷ் கோபி, டோம்ஸ், கிஷோர்,தேர்தல் ஆணைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அரசு அலுவலகங்கள் செயல்படும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.