தலைகுந்தா பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்
ஊட்டி, ஆக. 22: ஊட்டி-கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் கூட்டம், கூட்டமாக உலா வரும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ஊட்டி-கூடலூர் சாலையில் எச்பிஎப் முதல் தலைகுந்தா வரை சாலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட போனி குதிரைகள் உலா வருகின்றன. இவை சாலையில் அவ்வப்போது தறிகெட்டு ஓடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் சாலைகளிலேயே நின்று விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவை கூட்டமாக ஓடும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அபாயம் நீடிக்கிறது. இக்குதிரைகள் சில சமயங்களில் பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிகளில் உலா வருகின்றன. இதனால், வனப்பகுதிகளில் உள்ள விலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது. எனவே, தலைகுந்தா பகுதிகளில் உலா வரும் குதிரைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.