சொரனூர் ரயில் நிலையத்தில் பிரபல வழிப்பறி திருடன் கைது
பாலக்காடு, நவ. 21: பாலக்காடு மாவட்டம், சொரனூர் ரயில்நிலையத்தில் கடந்த 18ம் தேதி, மங்களூரு சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை செல்லும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொல்லம் மாவட்டம், அஞ்சலை பகுதியை சேர்ந்த ஷஜூ (35) என்பவர் பயணம் செய்தார். அவர், தனது செல்போனை ரயிலில் உள்ள பிளக் பாயின்ட்டில் சார்ஜ் போட்டிருந்தார். இரவு 11.30 மணி அளவில் ரயில் சொரனூர் சந்திப்பில் நின்றபோது, செல்போனை ரயிலில் இருந்த ஒருவர் திருடிவிட்டு தப்பிஓடினார்.
இதுகுறித்து ஷஜூ, அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் எஸ்.ஐ. அனில்மாத்யூ, ஏ.எஸ்.ஐ. சுர்ஜித்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொபைல் போன் டவரை வைத்து போலீசார் லோக்கேசனை கண்டுபிடித்து ரயில்நிலையம் அருகிலேயே மர்ம ஆசாமியை பிடித்தனர்.
விசாரணையில், வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியை அடுத்த சீரால் வரிக்கேரி காலனியைச் சேர்ந்த கண்ணன் (எ) மணி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை அவரிடம் இருந்து மீட்டனர். தீவிர விசாரணையில், அவர் ஏற்கனவே கோழிக்கோடு, கொடுங்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.