குன்னூர் குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம்
குன்னூர், நவ. 21: குன்னூர் அருகே குடியிருப்பு வளாகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் தொடர்வதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அண்மை காலமாக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் மட்டுமே இருந்து வந்த வனவிலங்குகளின் நடமாட்டம், தற்போது நகரப் பகுதிகளில் உள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி அலுவலகப் பணியாளர்களும் பீதி அடைந்துள்ளனர்.
உபாசி குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் கரடி ஒன்று நாள்தோறும் வந்து கதவுகளையும், ஜன்னல்களையும் உடைத்து அட்டகாசம் செய்து வருவதாக புகார் எழுந்தது. கடந்த 15ம்தேதி நள்ளிரவில் அங்குள்ள குடியிருப்பு வளாகத்தில் உலா வந்த கரடி, வீட்டு கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதியில் உலா வந்த சிறுத்தையின் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவரும் பட்சத்தில் பொதுமக்கள் இரவு நேரம் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஊருக்குள் உலா வரும் வனவிலங்குகளை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.