மீண்டும் பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் அவதி
ஊட்டி, செப். 18: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழை குறைந்து காணப்படும். அதன்பின், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் பெய்யும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பருவமழை குறித்த சமயத்தில் பெய்வதில்லை. இம்முறை மே மாதம் துவங்கிய மழை இதுவரை விட்டபாடில்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அவ்வப்போது மழை பெய்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஊட்டியில் எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கிறது.
கடந்த இரு தினங்களாக மழை சற்று குறைந்து பகல் நேரங்களில் வெயில் அடித்தது. ஆனால், மீண்டும் நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை துவங்கியுள்ளது. நேற்று ஊட்டி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. மேலும், நேற்று காலை முதலே வாகனம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அப்செட் ஆகினர்.