ஊட்டி காந்தல் பிரதான சாலை சீரமைப்பு
ஊட்டி, செப். 18: ஊட்டி காந்தல் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின் சாலை சீரமைக்கப்படும் நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு காந்தல் பகுதியில் உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த ஒரு தேவைகளுக்கும் ஊட்டி நகருக்கு வந்துச் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், காந்தல் பகுதியில் இருந்த சாலை மிகவும் பழுதடைந்து பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால், அந்த பள்ளத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இச்சாலையை சீரமைத்து தர வேண்டும் என வார்டு கவுன்சிலர் கீதா மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, ஊட்டி நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், பழுதடைந்த சாலைைய சீரமைக்க உடனடியாக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து கமிஷனர் உத்தரவிட்டார். தற்போது சாலை பழுதடைந்திருந்த இடத்தில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. சாலை சீரமைப்பு பணிகளை கவுன்சிலர் கீதா மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என அறிவுறித்தினர். பல ஆண்டுகளுக்கு பின் காந்தல் சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.