மசினகுடி-சிங்காரா சாலையில் திடீரென தோன்றிய புலி; சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
கூடலூர், ஆக. 14: மசினகுடி சிங்கார சாலையில் திடீரென தோன்றிய புலியால் சுற்றுலா பயணிகள்அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது மசினகுடி. இங்கிருந்து சிங்காரா செல்லும் சாலையில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் காரில் சென்றனர். அப்போது புதரில் இருந்து கம்பீரமாக புலி ஒன்று வந்தது. இதனை காரில் இருந்த சுற்றுலா பயணிகள் வீடியோவில் படம் பிடித்தனர். சிறிது நேரம் புலி அங்குமிங்கும் திரும்பி பார்த்தது.
பின்னர் அதுவாக புதருக்குள் சென்று மறைந்தது. இதனை வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள் சமூக வலைதளத்தில் பகிர்த்தனர். அது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வெளிவட்ட பகுதியான மசினகுடி, மாயார், பொக்காபுரம் சுற்றுவட்ட பகுதிகளில் ஏராளமான புதர் நிறைந்த காடுகள் உள்ளதால் அங்கு புலிகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இந்தப் புலிகள் அவ்வப்போது சாலைகளை கடக்கும்போது வாகன ஓட்டிகளில் கண்களில் தென்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.