கோத்தகிரியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு
கோத்தகிரி, நவ.13: கோத்தகிரி பகுதியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த சாரல் மழை, மிதமான ஈரப்பதத்தால் மலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, மலை காய்கறி, தேயிலை உற்பத்தி என விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் நிலவும் ஈரத்தன்மையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தேயிலைச் செடிகளுக்கு உரமிட்டும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் வந்த நிலையில் இதமான ஈரப்பத கால சூழ்நிலையால் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. தனியார் தொழிற்சாலைகளில் அரசு மானியம் வழங்கப்படாத நிலையில் பசுந்தேயிலை கொள்முதல் விலை ரூ.18 முதல் ரூ.25 வரை கிடைப்பதால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேயிலை அறுவடை பணிகளிலும், தொழிற்சாலைகளில் இரவு பகலாக நடக்கும் கொள்முதல் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் பணியாளர்கள் உட்பட வடநாட்டு பணியாளர்களும் தேயிலை தொழிலில் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.