புதிதாக இயக்கப்பட்ட பஸ்களின் இருக்கையால் முதுகு, கழுத்து வலி
ஊட்டி, நவ. 13: அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக இயக்கப்பட்டுள்ள பஸ்களில் இருக்கைகள் செங்குத்தாக உள்ளதால், பொதுமக்கள் வெகுதூரம் அமர்ந்து பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏராளமான புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே, இருந்த பழைய பஸ்களுக்கு பதிலாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓட்டை ஒடிசலாக இருந்த பழைய பஸ்களை மாற்றிவிட்டு புதிய பஸ்களை இயக்கியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், பல பழைய பஸ்களை புதுப்பித்துள்ளதாலும் தற்போது பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அதேசமயம், தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரு சில புதிய பஸ்களின் இருக்கைகள் சாய்ந்தபடி இல்லாமல், செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஊட்டியில் இருந்து கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் ஒரு சில பஸ்களும், நீலகிரி மாவட்டத்தில் கெத்தை, முள்ளிகூர் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களின் இருக்கைகள் மிகவும் செங்குத்தாக உள்ளது. இதனால், பயணிகள் வெகுதூரம் பயணிக்க முடிவதில்லை. முதுகு மற்றும் கழுத்து வலியால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, போக்குவரத்து கழகம் இந்த இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.