முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
கோத்தகிரி, செப். 13: கோத்தகிரி கட்டபெட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், இங்கிலீஸ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலங்களில் மலை காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் மூன்றரை மாத பயிரான முட்டைகோஸ் பயிரிடுவர். பருவமழை காலத்தின்போது பூமி விவசாயத்திற்கு ஏற்ற சூழலிலும், வெயிலின் தன்மையும், மழையும் விவசாயத்திற்கு ஏற்றவாறு உள்ளது. முட்டைகோஸ் பயிரிட ஏற்ற சீதோஷ்ணநிலை உள்ளதால் அதிகளவில் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பில்லிக்கம்பை, ஈளாடா, கதகட்டி, எஸ்.கைக்காட்டி, நெடுகுளா அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உரம், தண்ணீர், மருந்துகள் தெளித்து பயிரிடப்பட்டுள்ள முட்டைகோஸ் பயிர்களை பராமரித்து அறுவடைக்கு நன்கு தயார்படுத்தி வருகின்றனர். இதனால் அறுவடையின்போது நன்கு விளைச்சல் இருக்கும் எனவும், உரிய விலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.