சாலையோரத்தில் விபத்து அபாயம் தடுப்பு அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
மஞ்சூர், செப். 10: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தாய்சோலா. கிண்ணக்கொரை, இரியசீகை, கோரகுந்தா, அப்பர்பவானி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் தாய்சோலா வழியாகதான் சென்று வரவேண்டும். வாகன போக்குவரத்து மிகுந்த இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதுடன், கொண்டை ஊசி வளைவுகளுடன் மிக குறுகிய சாலையாக உள்ளது. மேல்குந்தா முதல் கிண்ணக்கொரை வரை சாலையின் பல இடங்களிலும் பேரிகார்டுகள் மற்றும் தடுப்புகள் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் இயக்க வேண்டிய நிலை உள்ளது.
இப்பகுதியில் சாலையோர தடுப்பு இல்லாததால் குறிப்பாக கனரக வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டுனர்கள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இப்பகுதியில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது இடப்பற்றாக்குறையால் பள்ளத்தில் தவறி விழுகின்றனர். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் முன் அப்பகுதியில் சாலையோரத்தில் தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.