வீட்டு கதவு உடைத்து நகை, பணம் திருட்டு
மஞ்சூர், செப். 10: மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு. இப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மணி. ஓட்டலின் கீழ்புறம் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மணி தனது குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான பாலக்காடு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாலக்காட்டில் இருந்து மீண்டும் எமரால்டு திரும்பிய மணி, வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப்போனது தெரிய வந்தது. ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து மணி, எமரால்டு போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.