ஊட்டி-எமரால்டு சாலையில் அபாயகரமான மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை
ஊட்டி, ஆக. 9: ஊட்டி-எமரால்டு சாலையில் அபாயகரமாக தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த பல ஆண்டுக்கு முன்பு கற்பூர மரங்கள், சீகை மரங்கள் மற்றும் சாம்பிராணி மரங்கள் அதிகளவு நடவு செய்யப்பட்டன. தற்போது இந்த மரங்கள் நெடுநெடு என வளர்ந்து காணப்படுகிறது.
மழைக்காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும் போது இந்த மரங்கள் சாலையில் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் சில சமயங்களில் வாகனங்கள் மீது விழுந்து வாகனங்களும் சேதமடைகின்றன. இந்நிலையில் சாலையோரங்களில் விபத்து அபாயம் நிறைந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், பெரும்பாலான பகுதிகளில் விபத்து நிறைந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விபத்து அபாயம் இருக்கிறது. இந்நிலையில் ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில், சில இடங்களில் கற்புர மாரங்கள் சாய்ந்து தொங்கிக் கொண்டிருப்பதால் இவைகள் எந்நேரமும் விழும் அபாயம் நீடிக்கிறது. எனவே இச்சாலையில் தொங்கிக் கொண்டிருக்கும் கற்பூர மரங்களை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.