கலெக்டர் அலுவலகம் அருகே பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
ஊட்டி, ஆக. 7: ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் டிபிஓ., சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் வரை சாலையோரத்தில் சரிவான இடம் உள்ளது. இந்த பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு பூங்காவாக மாற்றப்பட்டது.
ஆனால், இதனை முறையாக பராமரிக்கப்படாத நிலையில், புதர் செடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளித்தது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் அங்கு அரங்கேறி வந்தது. இந்நிலையில், இந்த இடத்தில் உள்ள புதர் செடிகள் அகற்றப்பட்டு, பூங்கா அமைக்க கலெக்டர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, இப்பகுதியில் இருந்த புதர் செடிகள் அகற்றப்பட்டு, தற்போது அந்த சரிவில் பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ஊழியர்கள் தற்போது இப்பகுதியில் பூங்கா அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.