முதியவரின் சடலம் 7 நாட்களுக்கு பின் மீட்பு
பாலக்காடு, ஆக. 6: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அடுத்த பாலபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யூசப் (60). இவர் கடந்த ஜூலை 27ம் தேதி ஒத்தப்பாலம் அருகே பாரதப்புழா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதையறிந்த ஒத்தப்பாலம் தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலமாக யூசப்பை தேடி வந்தனர்.
கடந்த 7 நாட்களாக தேடிப்பார்த்தும் அவரது சடலம் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது சடலம் கூடலூர் ஜாரம் கடவு பகுதியில் கரை ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற ஒத்தப்பாலம் போலீசார் சடலத்தின் அடையாளங்களை ஆய்வு செய்ததில், அது யூசப் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு ஒத்தப்பாலம் தாலுகா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.