அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டுக்குள் விஷ பாம்பு புகுந்ததால் பரபரப்பு
கூடலூர், ஆக. 6: கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் வார்டு அமைந்துள்ள பகுதியில் கழிப்பறைக்குள் கட்டு விரியன் பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அமைந்துள்ள பகுதியில் புதர்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன.
மேலும், இங்குள்ள கழிவறை பகுதியில் சுவர் மற்றும் கதவுகளில் ஓட்டைகளும் உள்ளன. புதர் பகுதியில் ஏராளமான பாம்புகள் நடமாட்டமும் உள்ளது. குறிப்பாக விஷம் அதிகம் உள்ள கட்டு விரியன் பாம்புகள் இப்பகுதியில் அதிகளவு உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கழிவறை பகுதிக்குள் அங்குள்ள ஓட்டை வழியாக பாம்பு ஒன்று புகுந்தது.
பாம்பு குழந்தைகள் வார்டு பகுதி கழிப்பறைக்குள் வருவதை பார்த்த குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த அங்குள பணியாளர்கள் பாம்பை அங்கிருந்து அருகில் உள்ள புதர் பகுதிக்குள் விரட்டினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.