வயக்காட்டில் ரசாயன கலவை ஏற்றி வந்த டேங்கர் லாரி வயலுக்குள் பாய்ந்தது
பாலக்காடு, நவ. 1: பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் அருகே வயக்காட்டில் ரசாயன கலவை கலந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார். இதனால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் அருகே தோலணூரை சேர்ந்தவர் ஓமனக்குட்டன் (42). இவர் டேங்கர் லாரி டிரைவர். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் தரூரிலிருந்து ரசாயன கலவை ஏற்றிய டேங்கர் லாரியை தோலணூருக்கு ஓட்டி வந்தார்.
அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோரத்தில் உள்ள வயலில் கவிழ்ந்தது. அந்த வழியாக வந்தவர்கள் கோட்டாயி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து லாரியிலிருந்த ரசாயன கலவையை வேறு டேங்கர் லாரிக்கு பாதுகாப்பாக மாற்றினர். இதனால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டாயி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் லாரி டிரைவர் ஓமனக்குட்டன் மது அருந்தி விட்டு லாரியை இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.