திமுக நிர்வாகி சின்னான் உடலுக்கு அரசு தலைமை கொறடா, கட்சி பிரமுகர்கள் அஞ்சலி
மஞ்சூர், செப். 30: மறைந்த திமுக நிர்வாகி சின்னான் உடலுக்கு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் ராஜூ உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக பொறுப்பு வகித்தவர் சின்னான்(66). கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரத்திற்கு ெகாண்டு செல்லப்பட்டது. காந்திபுரம் வீட்டில் வைக்கப்பட்ட சின்னான் உடலுக்கு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் பரமேஷ்குமார், மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், ஊட்டி தெற்கு (கிழக்கு) ஒன்றிய செயலாளர் பரமசிவன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, கீழ்குந்தா பேரூர் கழக செயலாளர் சதிஷ்குமார், அவை தலைவர் மாடக்கண்ணு, தகவல் தொழில் நுட்பஅணி துணை ஒருங்கிணைப்பாளர் சண்முகன், கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட திமுக பிரமுகர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர் நேரு, குந்தா கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வசந்தராஜன், கீழ்குந்தா பேரூராட்சி அதிமுக செயலாளர் சிவராஜ் உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த சின்னான் திமுகவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்ததுடன் கீழ்குந்தா பேரூராட்சியில் இரண்டு முறை தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது இவரது மனைவி நாகம்மாள் கீழ்குந்தா பேரூராட்சி 15வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.