சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
ஊட்டி,செப்.30: ஊட்டி அருகே கெந்தொரை ஆருகுச்சி கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டி அருகே கெந்தொரை ஆருக்குச்சி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் ஏற்பட்ட அடைப்பு மற்றும் இயந்திர கோளாறு காரணமாக குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதுதொடர்பாக தும்மனட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியின் வழியாக வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு இடையே நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். தங்கள் கிராம பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.