மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 97 பேர் கைதால் பரபரப்பு
ஊட்டி, செப்.24: பணி நிரந்தரம் செய்ய கோரி ஊட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கே2 அக்ரிமெண்ட் அடிப்படையில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இபிஎப் பிடித்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி முறையை புகுத்த கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின் வாரியம் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கு வாரியமே நேரடியாக கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடந்தது.