குன்னூர் அருகே மரத்தில் ஏறி தேனை ருசித்த 2 கரடிகள்
குன்னூர், ஆக. 19: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில், குறிப்பாக தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் கரடிகளால் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் கரடிகள் உணவுக்காக உயரமான மரங்களில் ஏறி தேன்கூடு, நாவல் பழம், உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றன.
இந்நிலையில், குன்னூரில் இருந்து கொலக்கொம்பை செல்லும் சாலையில் உள்ள கீழ் பாரதிநகர் என்ற கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு தேயிலைத்தோட்டத்தில் மரத்தின் உச்சியில் ஏதோ இரண்டு கருப்பு உருவம் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதை உற்று கவனித்தபோது, எந்த சத்தமில்லாமல் 2 கரடிகள் மரத்தில் இருந்த தேன்கூட்டை கலைத்து தேனை ருசி சாப்பிட்டு கொண்டிருந்ததை கண்டனர். சிறிது நேரம் மர உச்சியில் தேனை ருசித்த கரடிகள் மனிதர்களின் கூச்சல் சத்தத்தை கண்டதும் மின்னல் வேகத்தில் மரத்திலிருந்து கீழே இறங்கி தேயிலை தோட்டங்களுக்குள் சென்று மறைந்தது. இதை செல்போனில் பதிவு செய்த அப்பகுதியினர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.