வன விலங்கு தொடர்பான குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண்
ஊட்டி, ஆக. 12: நீலகிரி வனகோட்டம், முதுமலை புலிகள் காப்பக மண்டலத்தில் பொது மக்களின் வன விலங்கு தொடர்பான குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்களை ஒட்டியுள்ளதால், உணவு தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வருவதால், அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை குறைக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும், தினமும் பல்வேறு பகுதிகளிலும் வன விலங்குகள் தாக்குவது தொடர் கதையாக உள்ளது. நேற்றும் கூடலூர் பகுதியில் தனியார் எஸ்டேட்டில் காவலாளி ஒருவரை யானை மிதித்து கொன்றுள்ளது. மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ இந்த அவரகால எண்ணை 1800-425-4343 அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் ராஜேஷ்குமார் டோக்ரா, வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம் கிருபா சங்கர், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இது 24x7 சேவை ஆகும். ஆதலால் பொது மக்கள் அனைவரும் வனவிலங்கு குறித்த தகவலை இந்த எண்ணிற்கு தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.