சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு மாடு கூட்டம்
ஊட்டி, நவ. 11: ஊட்டி தமிழகம் மாளிகை பகுதியில் நாள்தோறும் வலம் வரும் காட்டுமாடுகளால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் மக்கள் வாழும் பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மேய்ச்சல் தேடி வரும் போது, பொதுமக்களை தாக்கி விடுகின்றன. இதில், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.வனங்களை ஒட்டிய பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்த இந்த காட்டு மாடுகள் தற்போது நகர் பகுதிகளுக்குள்ளும் சர்வ சாதாரணமாக வந்துச்செல்கின்றன.
இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள தமிழகம் மாளிகை பகுதியில் நாள்தோறும் ஒரு காட்டு மாடு கூட்டம் வலம் வருகிறது. இவைகள் சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே ஹில் பங்க் - பிங்கர்போஸ்ட் சாலையில் வலம் வருகின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதியடைகிறார்கள்.இந்த காட்டு மாடு கூட்டத்தை வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.