ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் மணக்கோலத்தில் உறுப்பினராக சேர்ந்த புதுமண தம்பதி
காட்டுமன்னார்கோவில், ஜூலை 8: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில், புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் தங்களை உறுப்பினர்களாக சேர்தது பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1ம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் ஆகியோர் பரிந்துரை பேரில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஒன்றியத்தில் கடலூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
திமுகவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் அரசின் சாதனைகளை எடுத்து கூறி, 2026ல் மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க தாங்கள் வாக்களிப்பதாக உறுதி அளித்து, திமுகவின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினர்களை சேர்த்தனர். அப்போது குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வ.கொளக்குடி பகுதியில் நேற்று காலை இத்திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது, அங்கு நடந்த திருமணம் ஒன்றில் புதுமண தம்பதிகள் பாலசுந்தரம், பேபிஷாலினி ஆகியோர் மணக்கோலத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதில் குமராட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் சோழன், கிளை செயலாளர்கள் பழனிவேல், பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சிவலோகம், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.