பெரம்பலூரில் புதிய புதினத்தின் திறனாய்வுக் கூட்டம்
பெரம்பலூர்,ஜூலை 14: பெரம்பலூரில் புதிய புதினத்தின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கவிஞர் பாட்டாளி எழுதிய தீராக்களம் எனும் புதினத்தின் திறனாய்வுக் கூட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் காப்பியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டதலைவர் செல்லதுரை, புலவர் அரங்க நாடன், பாவலர் கோவிந்தன், செந்தமிழ் வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியை ரம்யா, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கவிஞர் அகவி, திருச்சியைச் சேர்ந்த பாவலர் கவித்துவன் ஆகியோர் கலந்து கொண்டு, தீராக்களம் எனும் புதினம் குறித்து திறனாய்வு உரை நிகழ்த்தினர். விழாவில் முன்னாள் அரியலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் தமிழ் மாறன், வாழையூர் குணா, அகரம் திரவியராசு ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளியைப் பாராட்டிப் பேசினர்.
பாவலர் தமிழோவியன் தமிழிசைப் பாடல்கள் பாடினார். இதனைத் தொடர்ந்து நூலாசிரியர் பாட்டாளி ஏற்புரை பேசினார். முன்னதாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பாளை செல்வம் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சிவானந்தம் நன்றி தெரிவித்தார். அடுத்த நிகழ்வில் பெரம்பலூரில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.