கடையநல்லூர் அருகே பைக்குகள் மோதல்
கடையநல்லூர், செப்.15: கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டியில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
கடையநல்லூர் அருகேயுள்ள இடைகாலைச் சேர்ந்தவர் கணபதி சங்கர் (42). வேலாயுதம் (36) ஆகியோர் ஒரு பைக்கிலும், மற்றொரு பைக்கில் புளியங்குடியை சேர்ந்த முருகன் (31), இவரது மகன் அவினாஷ் (12) ஆகியோர் நேற்று முன்தினம் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையான அச்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரண்டு பைக்குகளிலும் சென்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அனைவரையும் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.