குடிநீர் குழாயை சீரமைப்பதில் அலட்சியம் ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் போட்டி போட்டு அலைக்கழிப்பு: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
திருவள்ளூர், ஜூலை 9: திருவள்ளூர் அடுத்த பத்தியால்பேட்டை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்றி, உடைந்த குழாயினை சீரமைப்பதில் ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த பத்தியால்பேட்டை, காமாட்சி அவென்யூவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் தண்ணீர் வீணாக வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு, குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரானது சாலையில் தேங்கி சாக்கடைபோல் காட்சியளிப்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இது சேலை ஊராட்சியிலிருந்து காக்களூர் ஊராட்சிக்குச் செல்லும் குடிநீர் குழாய் என்பதால், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில், மறுநாளே சரிசெய்து விடுவதாக உறுதி அளித்துவிட்டு, மறுநாள் மண்ணை மட்டும் வாரி போட்டுவிட்டு சரிசெய்யாமல் சென்றுவிட்டனர். அதே நிலையில்தான் தற்போது வரை குடிநீர் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது.
வீட்டின் வாசலிலேயே தேங்கி நிற்கும் கழிவுநீரை சரிசெய்யாமல், மேடுபோல் மண்ணை வாரிபோட்டதால் வீட்டில் உள்ளவர்கள் வாகனத்தை வெளியே எடுத்துச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, மீண்டும் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சென்று கேட்டபோது, எங்கள் ஊராட்சி எல்லையில் இந்த குடிநீர் குழாய் இல்லை, நகராட்சி எல்லைக்குட்பட்டது என்று தட்டிக்கழித்தனர். இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் கேட்டதற்கு, அது காக்களூர் ஊராட்சி குழாய். ஆகையால் நாங்கள் சரிசெய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டனர். ஆனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் சாலையில் வழிந்தோடும் குடிநீரை சரி செய்யாமல் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர். எனவே, குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வழிந்தோடிக் கொண்டிருப்பதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில், வழக்கறிஞர் சுரேஷ்குமார் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.