சிங்கப்பெருமாள் கோவில் புதிய மேம்பாலத்தில் பெயர் பலகை தூண், சிலை வேலிகளை அகற்ற வேண்டும்: விபத்துகள் ஏற்படும் என வாகன ஓட்டிகள் அச்சம்
செங்கல்பட்டு, ஜூலை 10: செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக சிங்கபெருமாள் கோவில் உள்ளது. இங்கு சிங்கபெருமாள் கோவில் - பெரும்புதூர் நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், பெரும்புதூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் ஆப்பூர், திருக்கச்சூர், கொளத்தூர், தெள்ளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர ரயில்வேகேட் இடையூறாக இருந்தது.
இந்நிலையில், மேம்பாலம் அமைத்துத்தர கோரி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று 2008ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. கடந்த 2011க்கு பிறகு 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
அதனை தொடர்ந்து, 2021ம் ஆண்டு மீண்டும் ரூ.138.27 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் துவங்கப்பட்டு வேகமாக பணிகள் முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோயில்-ஒரகடம் மார்க்கமாக செல்லும் வகையில் ஒரு பக்கம் மட்டும் மேம்பாலம் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் மேம்பால சாலை திறக்கப்படாமல் இருந்து பணிகள் முடிந்த பிறகு இந்த மேம்பால சாலையை ஜூன் 29ம்தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இந்த வழித்தடத்தில் தாம்பரம் மார்க்கமாகவும் இருந்தும் பெரும்புதூர், ஒரகடம், திருக்கச்சூர் மார்க்கமாக இந்த மேம்பாலத்தில் ஏறிச்செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தில் செல்லும் வழியில் சாலையில் மத்தியில் அடுத்தடுத்த ஊர்களின் பெயர்கள் அடங்கிய பில்லர் உள்ளது. அதேபோல ஏற்கனவே மக்கள் சர்வீஸ் சாலையாக பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு கருதி அங்கு இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மேம்பாலம் ஏறி இயங்கியதும் சாலையின் நடுவே எம்ஜிஆர் சிலை அந்தரத்தில் தொங்குகிறது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையை கிராஸ் பண்ணித்தான் மேம்பாலத்தில் வாகனங்கள் ஏறிச்செல்ல வேண்டும். இதனால் விபத்து ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பில்லரை சாலையோரம் மாற்றியமைக்க வேண்டும். அதேபோல சாலையில் உள்ள இரும்பு தடுப்புவேலியை அகற்ற வேண்டும். ஒருபுறம் எம்ஜிஆர் சிலையை ஆபத்தான முறையில் நடுவில் நின்ற வண்ணம் உள்ளது மறுபுறம் இரும்பு பில்லர் ஒன்று இருந்து வருகிறது. சாலையோரம் திரும்ப அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவைகளை செய்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் என வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.