மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி
ராசிபுரம், அக்.31: நாமக்கல் மாவட்ட அளவிலான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழாவை, ராசிபுரம் தனியார் பள்ளியில் நேற்று சிஇஓ தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மாநில அளவிலான கலைத்திருவிழா நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா, ராசிபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு, கலைத்திருவிழாவை குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். அப்போது, மாணவ, மாணவிகளிடம் பேசுகையில், ‘போட்டிகளில் அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, நமது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்,’ என்றார். விழாவில், நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளிகளின் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியகர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
