மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
சேந்தமங்கலம், அக்.30: நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட மணல் கடத்தப்பட்டு வருவதாக, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை அடுத்த ஏழூர் பிரிவு சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மணல் ஏற்றிவந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் நிறுத்தினர். அப்போது அதிகாரிகளை பார்த்த லாரி டிரைவர், லாரியை முன்னதாகவே நிறுத்தி விட்டு, கீழே இறங்கி தப்பியோடிவிட்டார். டிப்பர் லாரியை சோதனையிட்ட போது, அதில் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.