விவேகானந்தா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி
திருச்செங்கோடு, செப்.30: உலக அளவில் இருதய நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதையும், மாரடைப்பால் மரணம் அடைவதையும் தடுக்கும் வகையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இருதய தினத்தின் கருப்பொருள் ஒரு துடிப்பை தவற விடாதீர்கள் என்பதாகும். இதனையொட்டி, திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் கருணாநிதி, இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தனாரீஸ்வரன், துணைத்தலைவர் டாக்டர் கிருபாநிதி, டீன் டாக்டர் முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருச்செங்கோடு பழைய பஸ் நிலையத்தில் இருந்து நடைபெற்ற பேரணியில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவமனை இருதயவியல் மருத்துவத்துறை டாக்டர்கள் சந்தோஷ்குமார், பிரியா, அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். செந்தூர் செல்வம் மற்றும் மருத்துவமனை பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.