டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நாமக்கல், நவ.28: நாமக்கல் மாநகராட்சி பட்டறைமேடு கங்கா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இரும்பை துண்டிக்கும் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து அதிக சத்தம் வருவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அந்த தொழிற்சாலைக்கு மின்சாரம் பெற அதிக மின் அழுத்தம் செல்லும் வகையில், டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று டிரான்ஸ்பார்மர் அமைய உள்ள இடத்தில், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்க கூடாது என கோரி சிறிது நேரம் கோஷமிட்டனர். பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.