உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
பரமத்திவேலூர், நவ.28: பரமத்திவேலூரில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கட்சி அலுவலக வளாகத்தில், பேரூர் செயலாளர் முருகன் முன்னிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகிழ்பிரபாகரன், திமுக கொடியை ஏற்றி வைத்தார். பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து, பேரணி புறப்பட்டு நான்கு ரோடு, திருவள்ளுவர் சாலை வழியாக, பள்ளி சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேரணி பேருந்து நிலையம் வழியாக பேட்டை கலைஞர் படிப்பகம் சென்று, திமுக கொடியேற்றி கலைஞர் மற்றும் அண்ணா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பால், பன் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குச்சிப்பாளையம் அரசு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பீரோ வழங்கப்பட்டது. பரமத்திவேலூர் பேரூர் செயலாளர் முருகன், துணை செயலாளர் செந்தில்நாதன், வழக்கறிஞர்கள் பிரிவு துணை அமைப்பாளர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், வக்கீல் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.