2 லாரிகளில் மணல் கடத்திய 3 பேர் கைது
பரமத்திவேலூர், அக்.28: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கான்கிரீட் நிறுவனம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது இரண்டு லாரிகளில தலா 4 யூனிட் காவிரி ஆற்று மணல் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து லாரி டிரைவர்களிடம் மணல் கொண்டு செல்வதற்கான பர்மிட் கேட்டபோது, அவர்கள் ஆவணங்கள் ஏதுமில்லை. மணல் கடத்தலில் ஈடுபட்டது லாரி டிரைவர்களான சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தித்திகிரிபட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சக்திவேல் (41), மேச்சேரியை சேர்ந்த இளையராஜா(40), ஓமலூர் அருகே மணக்காட்டூர் பகுதியை சேர்ந்த சங்கர்(27) என்பது தெரியவந்தது. பின்னர், மூன்று பேரையும் கைது செய்த போலீசார், மணலுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.