பொதுமக்களை கத்தியால் குத்திய 3 பேர் குண்டாசில் கைது கலெக்டர் உத்தரவு
ராசிபுரம், நவ. 26: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - பட்டணம் சாலை அருகே, கடந்த மாதம் 26ம்தேதி மதுபான கடை மற்றும் சாலைகளில் நடந்து சென்ற பொதுமக்கள் பலரை, 3 இளைஞர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்டணம் சாலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் பிரதீப்(21), தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், ராசிபுரம் போலீஸ் எஸ்ஐ சுரேஷ் என்பவரிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் 3 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 3 இளைஞர்கள் மீது, ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தற்போது பொது மக்கள் மற்றும் இளைஞர்களை கத்தியால் தாக்கிய சம்பவத்தில், அவர்களை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி., விமலா, கலெக்டர் துர்கா மூர்த்திக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர், குற்றச்செயல்களில் ஈடுபட்ட ராசிபுரம் சிராஜூதீன் மகன் ரியாசுதீன்(24), அவரது தம்பி அஜிபுதீன்(23) மற்றும் வி.நகர் ராஜா பாய் மகன் பாபு(23) ஆகிய 3 பேரை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ராசிபுரம் போலீசார், சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேருக்கும் குண்டாஸ் வழக்கு நகலை வழங்கினர்.