100 மரக்கன்றுகள் நடும் பணி
சேந்தமங்கலம், அக்.25: புதுச்சத்திரம் ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் கௌதம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்துகொண்டு 100 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகே ஒன்று அல்லது இரண்டு மரங்களை நட்டு வைத்து, பராமரித்து வளர்க்க வேண்டும். ஒரு ஊராட்சிக்கு மழைப் பொழிவிற்கும் சுற்றுச்சூழல் மாஸ் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய பங்காற்றுவது மரங்கள். எனவே, ஊராட்சி பகுதிகளில் அதிக அளவில் மரங்களை வளர்க்க மக்கள் முன்வரவேண்டும்.
ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் ஒவ்வொரு புறம்போக்கு நிலங்களிலும், ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு, அதனை பராமரிப்பு செய்தால், ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க முடியும். எனவே, பொதுமக்கள் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் சாந்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி, ஊராட்சி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.