பட்டாசு கழிவுகளை அகற்றிய பணியாளர்கள்
திருச்செங்கோடு, அக்.23: திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளை கொண்டதாகும். தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர். பட்டாசு கழிவுகள் தெருவில் கிடந்தன. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, கமிஷனர் வாசுதேவன் உத்தரவின் பேரில், துப்புரவு அலுவலர் சோலை ராஜா தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஒட்டு மொத்தமாக பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் சுரேஷ்பாபு உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பட்டாசு கழிவுகளை அகற்றினர். தொடர் மழை பெய்து தெருவெல்லாம் ஈரமாக இருக்கும் நிலையில் மிகவும் சிரமப்பட்டு தூய்மை பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக ஒரு நாளைக்கு சராசரியாக 36 டன் குப்பை கழிவுகள் சேகரமாகும். தீபாவளியால் பட்டாசு கழிவுகள் மட்டும் 90 டன் அளவுக்கு சாலையில் கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.